Friday, January 7, 2011

காக்கிக்குள்ளும் ஈரம்

மாத ஊதியத்தில் சமூக சேவை: காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கு

வாகன சோதனையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் முறைகேடாக பணம் பறிக்கும் போலீசாரை பார்த்திருக்கிறோம். ஆனால், தங்களது ஊதியத்தில் மாதம் 100 ரூபாய் ஒதுக்கி ஆதரவற்றோருக்கு உணவும், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு நிதியும் வழங்கும் போலீசாரை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆம், பிறர் அறியாத வகையில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படையில் பணி யாற்றும் 100 போலீசார்.
தமிழக காவல்துறையில் சமீபகாலமாக "போலீஸ் இமேஜ்' குறித்து அதிகம் பேசப்படுகிறது. இத்துறையில் பணியாற்றும் சிலரது கரடுமுரடான அணுகுமுறை, பண முறை கேடுகளால் ஒட்டுமொத்த போலீசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு "போலீஸ் இமேஜ்' அடிவாங்குகிறது. இதை தூக்கி நிறுத்த பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள் போலீசாருக்கு நடத்தப்பட்டு, தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. "ஸ்டேஷனுக்கு புகார் மனுவுடன் வருவோரை கனிவுடன் வரவேற்று, குறைகளை விசாரித்து உடனுக்குடன் தீர்வு காணுங்கள்; பண முறைகேடுகளை முற்றிலுமாக தவிருங்கள்; வழக்கு விசாரணை, என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாதீர்கள்; பொதுமக்களுடனான நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், பலரும் இதை பின்பற்றுவதாக தெரியவில்லை.

இந்நிலையில், ஏழைக்குழந்தைகள் பயிலும் பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும் முயற் சிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கோவை மாநகரில் இதற்கான திட்டம் துவக்கப்பட்டு 15 பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் மூலமாக, போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான சேவை பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, எவ்வித விளம்பரமும் இல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கமுக்கமாக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படை போலீசார். இப்பிரிவில் பணியாற்றும் 100 போலீசார் இணைந்து, "காவலர் காக்கும் கரங்கள்' என்ற பெயரில், பதிவு செய்யப் படாத சேவை அமைப்பை நடத்தி வருகின்றனர். இதில், அங்கம் வகிக்கும் போலீசார் மாதம் தோறும் தலா 100 ரூபாயை தங்களது ஊதியத்தில் இருந்து வழங்கி சேவை நிதியை பராமரிக்கின்றனர்.

இந்நிதியை கொண்டு கோவையிலுள்ள அனாதை குழந்தைகள் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் அமைப்புகளுக்கு உணவு, உடைகளை வழங்குகின்றனர். தவிர, கல்விக்கட்டணம் செலுத்த முடியாத ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்று நிதி வழங்கி வருகின்றனர். இதற்காக, யாரிடமும் கையேந்தாமல் முழுக்க, முழுக்க தங்களது ஊதியத்தின் மூலம் கிடைக்கும் நிதியையே பயன்படுத்துகின்றனர். இதிலென்ன வியப்பு என்றால், இவர்களது ஒன்றரை ஆண்டு சேவை குறித்த விஷயம், அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், போலீசாரில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அந்த அளவுக்கு விளம்பரமின்றி சேவையாற்றி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, "சிறுதுளி' அமைப்பிடம் 1,100 மரக்கன்றுகளை பெற்று, போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம், போலீஸ் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நட்டு அக்கறையுடன் பராமரிக்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் "சிறுதுளி' அமைப்பிடம் விதை மற்றும் கன்று வளர்ப்புக்கான பைகளை பெற்று 300 மரக்கன்றுகளை வளர்த்து, திரும்ப ஒப்படைத்துள்ளனர். அடுத்ததாக, 5,000 மரக்கன்று வளர்த்து நகரின் பல இடங்களில் நட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, "காவலர் காக்கும் கரங்கள்' அமைப்பில் அங்கம் வகிக்கும் போலீசார் கூறியதாவது: நாங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதில் வியப்பு ஏதுமில்லை; அது, எங்களது கடமை; இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் கூட. கல்வி, வேலை வாய்ப்பு பெற்று சமூகத்தில் நல்ல முறையில் வாழும் வாய்ப்பு பெற்ற நாங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு உதவுகிறோம்.

மாதம் இருமுறை அனாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உணவளித்து உதவுகிறோம். இதன் மூலமாக ஒருவித ஆத்மதிருப்தியும், ஆனந்தமும் கிடைக்கிறது. அடுத்ததாக, எங்களது குடும்ப உறுப்பினர்களையும் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். மனைவி, குழந்தைகளுடன் சென்று, ஆதரவற்றோருக்கான உதவிகளை செய்யவுள்ளோம். இது, எங்களது குழந்தைகள் உலக நடப்புகளையும் சமூக ஏற்ற, தாழ்வுகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும். அதுமட்டுமின்றி, நாமும் ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் குழந்தைகளிடம் ஏற்படும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment