கன்யாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு குடும்பம். தாய், தந்தை, இரு பெண் குழந்தைகள். யாருக்கும் எந்த ஊனமும் இல்லை. ஆனால், குடும்பத்தின் தொழில் பிச்சை எடுப்பது.
இந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து கவனித்து வந்த சேவாபாரதி தொண்டர்கள், முதலில் இரு பெண் குழந்தைகளையும் சந்தித்துப் பேசினர்.
அந்த வழியாகப் பள்ளிக்குப் போகும் அவர்கள் வயதுப் பிள்ளைகளைக் காட்டி, “உங்களுக்கும் அவர்களைப் போல் பள்ளிக்குப் போக ஆசை இல்லையா?” என்றார்கள்.
அதற்கு அந்தப் பிள்ளைகள், “எங்களுக்கும் ஸ்கூலுக்குப் போகணும், படிக்கணும், நல்ல வேலைக்குப் போய் மற்றவர்களைப் போல் சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் வாழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வசதியில்லை. அப்பா, அம்மா படிக்கக் காசு கொடுக்காமல் பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்டனர்.
“உங்களைப் படிக்க வைத்தால் ஒழுங்காகப் படிப்பீர்களா?” என்று சேவாபாரதி தொண்டர்கள் திருப்பிக் கேட்டனர். “அப்பா, அம்மா சம்மதித்துப் பள்ளிக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் படிப்போம்!” என்றனர்.
உடனே அந்தச் சிறுமிகளை, அவர்களின் பெற்றோரிடம் அழைத்துச் சென்ற சேவாபாரதி தொண்டர்கள், சிறுமிகளைப் படிக்க வைக்கத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
பெற்றோரும் சம்மதித்தனர்!
உடனடியாக அருகில் இருந்த அரசுப் பள்ளியில் சிறுமிகள் இருவரையும் சேர்த்த சேவாபாரதி தொண்டர்கள், அவர்களுக்குத் தேவையான சீருடை, நோட்டு, புத்தகம் உட்பட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
சிறுமிகளும் பள்ளிக்குச் செல்ல தொடங்கினர்.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சிறுமிகள் சேவாபாரதி தொண்டர்களை சந்தித்து ஒரு விஷயத்தை கூறினார்கள்.
“நாங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு எங்களைப் போன்ற சக மாணவிகளுடன் பேசும் போது அவர்களது அப்பாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வேலை செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் எங்கள் அப்பாவை பற்றி என்ன சொல்வது என்று அப்பாவிடமே கேட்டோம். அன்று முதல் அவர் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டுக் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து வருகிறார்” என்றனர்.
சேவையில் நாம் (தொடர்ந்து) ஈடுபட நமக்கு இதைவிட வேறு என்ன தூண்டுகோல் வேண்டும்?!
Source: http://sevabharathitn.org/
No comments:
Post a Comment